
THE ETERNAL WAY
Author: Roy Eugene Davis
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயம்
5. சந்யாச யோகம்
அத்தியாய முகவுரை:சந்யாசம் என்பது நம் எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள், சூழல்கள் ஆகியவற்றுடனான நம் உண்மையான உறவை நாமே கண்டுகொள்வதாகும். அது நிர்ப்பந்தமோ பற்றோ இன்றி வாழ்தலாகும். வெற்றிகரமான யோகப்பயிற்சியின் முழுமை எதுவென்றால், வரம்பற்ற பரம்பொருளுடன் உறவு வைத்துள்ள ஆன்ம இருப்பு என நாம் நம்மை ஐயமற உணர்தலாகும்.
அர்ஜுனன் வினவினான்:
5.1 ஆன்ம வளர்ச்சிக்கு கர்மம் செய்யாமல் விடுவதைப் புகழ்கிறாய்; மேலும் அவைகளின் பற்றற்ற செய்கையையும் புகழ்கிறாய். தீர்மானமாகச் சொல். இரண்டில் எது மேம்பட்டது?
உரை:
ஆன்மஞானத்தைத் தேடுவதற்கு ஆன்மப் பயிற்சிகளை விடுவதா, இல்லையா என்ற குழப்பத்திற்கு தீர்வு தேடி, ஞானமூலத்திற்கே உள்முகமாகச் சென்று சாதகன் விசாரணை செய்கிறான்.
கிருஷ்ணன் பதில் கூறினான்
5.2. செயல்களைச் செய்யாமை, பற்றற்ற செய்கை இவ்விரண்டும் முக்தியை அடைவிக்கும். இவ்விரண்டில் பற்றற்ற செய்கை மேம்பட்டது.
உரை:
இரண்டு வழிகளிலும் வெற்றி தரும் விளைவு என்னவென்றால் சுயஉணர்வுகளிலிருந்து விடுவிப்பதே ஆகும். ஒரு சராசரி மனிதனுக்கு முழுமை அறிவு தன்னால் வாய்ப்பதென்பது கீழ்கண்ட மூன்று காரணங்களால் கடினமானது:
அ. முனைவொருமையின் போதாமையும் நுண்ணறிவுப் போதாமையும்
ஆ. மனமோதல்களின் தாக்கம்
இ. உடலும் மனதும் ஆன்மவிழிப்புக்குத் தோதாக சுத்தீகரிக்கப்பட வேண்டியிருத்தல்
அர்ஜுனனின் மனநிலை அவனுக்கு யோகப்பயிற்சி தேவைப்படுதலைக் குறிப்பிடுவதால், அவனுக்கு இங்கு அது அறிவுறுத்தப்படுகிறது. ஆன்மீகப் பாதையில் வெற்றிபெற, சாதகன் தனக்குத் தகுந்த நன்மைதரும் பாதையை தேர்ந்தெடுத்து, அதிலேயே நிலைபெற்று முன்னேறுதல் அவசியம்.
5.3. வெறுக்காமலும் விரும்பாமலும் இருப்பவன் உண்மையில் சந்யாசி. இரட்டைகளை வென்ற அவன் கர்மக் கட்டிலிருந்து விடுபட்டவன்.
உரை:
வெளிப்படையாய்த் தெரிபவைகளை புறக்கணித்தல் என்பது அவைகளின் மேல் அக்கறையற்றிருப்பதல்ல, தவிர்க்கமுடியாததை விலக்குவதமன்று. அது நடுநிலைமையுடன், தன் திறமைக்கு சவால் விடாதவைகளுக்கு அதிக கவனம் செலுத்தாமல், எதிர்கொள்ள வேண்டிய கடமைகளுடன் திறம்பட உறவாடுதல் ஆகும். இம்முறையில், பார்வைக்கும் அனுபவத்திற்குமிடையே உணர்ச்சிப்பாடுகளின் முரண்பாடுகள் இன்மையினால், மனச்சிக்கல்கள் உருவாவதில்லை.
ஆன்ம விழிப்பானது:
• மனமோதல்கள்,
• அமைதியிழந்த மனநிலை,
• மூட நம்பிக்கைகள்,
• காட்சிப்பிறழ்சிகள்,
ஆகியன இல்லாது இருந்தால் விவேகம், உள்தூண்டல் ஆகியன பிசிறற்ற காட்சியையும் திறம்பட்ட செயல்பாட்டினையும் சாத்தியப்படுத்தும்.
5.4. அறிவிற் குறைவுபட்டோர் சாங்கியமும் யோகமும் வெவ்வேறெனக் கூறுவர்; பண்டிதர் அவ்வாறு கூறமாட்டார். இரண்டில் எதனை வெற்றிகரமாகப் பின்பற்றினாலும், இரண்டின் பலனும் கிடைக்கும்.
உரை:
புதியன காணலும் ஆன்மீக வளர்ச்சியும் பலன் மிக்கது ஆவது எப்போதென்றால் அது நம் மனோபாவத்திற்கும் திறனுக்கும் ஒத்துப்போகும் போதேயாகும். சில சாதகர்கள் ஆன்ம விளக்கத் தேடலுக்கு புதியவராயிருக்கையில், முனைவொருமை மற்றும் நுண்ணறிவில் தேறியும், சிலர் பக்தி, சேவையில் தேறி ஆனால் உள்முக தியான ஒருமை வாய்க்கப் பெறாதவராயும் இருக்கக் கூடும்.
5.5. சாங்கியர்கள் அடையும் மெய்யுணர் நிலையையே யோகிகளும் அடைகின்றனர். இரண்டும் ஒன்றெனப் பார்க்கும் சாதகனே உண்மையைப் பார்க்கிறான்.
உரை:
யோகப்பயிற்சியின் வெளித்தோற்றங்கள் மாறினாலும் அகவழிப்பாதை (அதாவது, ஆன்மஞானம் வெளிப்படுவதான படிநிலைகள்) ஒன்றே.
அறிவுள்ள சாதகன் தனக்கு சாதகமான ஒன்றைக் கடைபிடித்தாலும், பிறரின் தேர்வினையும் மதிக்கிறான். நம்பகமான ஆன்ம வளர்ச்சிக்கு, விரைவான உள்ளார்ந்த குணங்களை ஞானத்தை படிப்படியாக நல்கக்கூடிய கல்வித்திட்டத்தை, உரிய வாழ்வை, ஆன்மீக விசாரணையைக் கடைபிடிக்க வேண்டும்.
5.6. சந்யாசத்தை யோகப்பயிற்சியின்றி மேற்கோள்வது அரிது. யோகத்தை ஒழுகும் முனிவன் விரைவில் பிரஹ்மத்தை அடைகிறான்.
உரை:
மனப் பரிசீலனையால் மட்டுமே உணர்ச்சிகளை நிவர்த்தித்தும் பந்தங்களிலிருந்து விடுபட்டும் சூழ்நிலைகளுடனும் உறவுகளுடனும் ராசியாவது என்பது கடினம்.
நுண்ணிய புரிதல் நமக்கு நன்கு கிட்டியபோதும்,
அ. உணர்ச்சி நிலைகள் நம் அறிவார்ந்த நேர்மையான முயற்சிகளில்
ஆ. புலன் ஆத்திரத்தால் மனம் வெல்லப்படுவதில்
இ. ஆழ்மனக் கட்டளைகளால் உந்தப்படுவதில்
ஈ. அடிமைத்தனத்திற்கு ஆட்படுவதில்
என பல வழிகளில் குறுக்கீடு இருக்கும்.
மேலும்,
• உடல் ஆத்திரங்கள் நிர்ப்பந்திக்கலாம்,
• பிடிவாதமான இச்சைகள் நெருக்கலாம்,
• நினைவுகள் நம் விழிப்புணர்வினை நிரப்பி மன மற்றும் உணர்ச்சிக் குழப்பங்களை ஏற்படுத்தலாம்.
• சோர்வு மன ஒருமையினைக் கெடுக்கலாம்.
• உடல்சத்துக் குறைபாடு நோய்க்குக் காரணமாகலாம்.
• ஊசலாட்டு மனச்சாயல்கள் மனோபாவத்தையும் நடத்தைகளையும் ஆதிக்கம் செய்யலாம்.
மேற்சொன்னவையுட்பட பல்வேறு காரணங்களினால், அவரவர் தேவைக்கேற்றவாறு அதேசமயம் முழுமையான ஆக்கபூர்வ வாழ்வை அனுசரித்த யோகப்பயிற்சி, ஆன்மீக வளர்ச்சிக்கு நடைமுறை சாத்தியமான அணுகுமுறையாகும்.
இவ்வாறு, சாதகர்களில் அறிவார்ந்தவர், யோகப்பயிற்சியில் ஒழுக்கமுடையவராய் ஞானத்திற்கு துரிதமாக விழிப்புப் பெற்று இறையனுபவம் பெறுகிறார்.
5.7. யோகப்பயிற்சிகளுக்கு அர்ப்பணித்தவன், தூய விழிப்புணர்வு உள்ளவன், அமைதியான ஆன்ம இயல்பு உள்ளவன், புலனடக்கம் உள்ளவன், பிரபஞ்ச உணர்வைப் புரிந்தவன், செயல்களால் கறைப்படுத்தப்படுவதில்லை.
உரை:
பிரபஞ்ச உணர்வு அனுபவமாகும்போது, முந்தைய பழக்கங்களுக்கு ஒருவன் நிர்பந்திக்கப்படுவதில்லை. புரிந்து கொண்டு வாழும்போது சூழ்நிலைகளையும் உறவுகளையும் உள்ளவாறு காணும் மனத்திறவு உண்டாகிறது. மயக்கங்களும் காட்சிப்பிறழ்ச்சிகளும் விலகி ஆத்ம திருப்தி நிலவுகிறது. இதனால் செயல்களுக்காகவோ அதன் விளைவுகளுக்காகவோ, பற்றின்றி உரிய பலனைக் கொடுக்க செயல்கள் செய்யப்படுகின்றன.
5.8. யோகப்பயிற்சியில் நிலைத்தவாறே, பார்ப்பதோ, கேட்பதோ, தொடுவதோ, முகர்வதோ, உண்ணுவதோ, நடப்பதோ, மூச்சுவிடுவதோ, என எதை செய்வதாயினும், “நான் உண்மையில் எதுவும் செய்யவில்லை” என்று மெய்யறிவாளன் அறிய வேண்டும்.
5.9. பேசும்போதும் உடல் காரியங்கள் ஆற்றும்போதும், பொருட்களைக் கையாளும்போதும், எது செய்தாலும், “புலன்கள் அவைகளின் விஷயங்களோடு இணைந்து செயல்புரிகின்றன” என சாதகன் அறிகிறான்.
5.10. தண்ணீரால் தாமரை இலை நனைக்கப்படாததைப் போலே, பற்றுவிட்டு எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து ஒழுகும் சாதகன் துர்ப்பாக்கியங்களால் கறைபடுவதில்லை.
உரை:
யோகப்பயிற்சியில் உறுதியே துல்லியமாக விவேகித்து விசாரிக்கத் திறவுகோலாகும். நாம் எப்போது உறுதியாக இருக்கிறோமென்றால்
• ஆன்ம விழிப்பின் பயிற்சிகளை நாம் கடமையாகக் கொள்ளும் போது
• இயற்கை மற்றும் இறைவனுடனான நம் உறவைப் புரிந்துகொள்ளுதலில் உறுதிப்படும்போது
• எது நமக்குச் சிறந்தது என நாம் அறிந்து செய்யும்போது
அப்போது நாம் நம் எண்ணம், உணர்வு, செய்கை மற்றும் புற விஷயங்கள் ஆகியவற்றுக்கு நாம் சாட்சியே என எளிதில் நினைவு படுத்திக் கொள்ளலாம். நாம் உறவுகளில் தொடர்பு கொண்டிருப்பினும், பேருணர்வின் வெளிப்படுத்தப்பட்ட கலனங்கள் (units) என்பதைத் தவிர நாம் வேறல்ல.
5.11. யோகிகள் பற்றை விட்டு, வியக்த விழிப்புணர்வைத் தூய்மையாக்க, உடலாலோ, மனத்தாலோ, புத்தியாலோ, இந்திரியங்களாலோ கர்மம் செய்கின்றனர்.
உரை:
சாதகனின் விழிப்புணர்வு வெளியைத் தூய்மையாக்குவதே பயிற்சியின் நோக்கம்.
இது,
• சரியான புரிதல் மற்றும் சமநோக்கு
• செயலுக்கு உடலை சாதனமாக்குதல்
• மன ஏற்ற இறக்கங்களையும் மாற்றங்களையும் குறைத்தல்
• விவேகித்த விசாரணையை மேம்படுத்துதல்
• புலன்தூண்டல்களை ஒழுங்குபடுத்துதல்
ஆகியவற்றால் சாத்தியப்படுகிறது.
5.12. கர்ம பலனைத் துறந்தவனும் யோகப்பயிற்சியில் நிலையாக ஒழுகுபவனும் ஆகிய ஒருவன் அமைதியை அனுபவிக்கிறான். ஒழுக்கமற்றவனோ ஆசையால் தூண்டப்பட்ட கர்மபலன்களுக்கு பற்றுள்ளவனாகிறான்.
உரை:
சத்காரியப் பேரார்வமுள்ள ஒழுக்கசீலன் செய்யவேண்டுவனவற்றை குதூகலத்துடன் செய்கிறான். இவ்வகையில் உள்ளூர அமைதியாக எப்போதும் நாம் இருக்கமுடியும். இவ்வொழுக்கமின்றி நாம் ஆசைகளுக்குக் கட்டப்பட்டவர்களாய், பலன் கருதிய மற்றும் ஆசை நிறைவேற்றிக் கொள்வதான செயலில் ஈடுபடுபவர்களாகிறோம். எண்ணங்கள் உணர்ச்சிகள் வேறுவிதமாய் நம்மைத் தூண்டினாலும், ஒரு ஆன்மீகக் கடமையாக சாதகன் தியானம் செய்யவேண்டும்.
5.13. உள்ளூர எல்லாப் பற்றையும் துறந்து, அதில் நன்கு தேர்ந்து, செயல்களைச் செய்யாமலும், செயலுக்குக் காரணமாகாமலும் உடலில் ஜீவாத்மா சுகமாக வாழ்கிறது.
உரை:
தேவையான மற்றும் அறிவூட்டம் பெற்ற செயல்களைத் துறக்கவேண்டும் என்பதல்ல. மனதாலும் உணர்ச்சியாலும் பற்றின்றியிருத்தலே யோகப்பயிற்சியாளன் செய்யவேண்டியது. இது முழுக்கவும் உள்ளார்ந்த செய்கையாகும். அப்போது ஒருவனுடைய செயல்கள் ஆன்ம ஞானத்தில் நிலைத்த ஆன்மாவினுடையதல்ல, ஜட இயற்கையின் பாற்பட்டதென அறிந்து சுகமாக வாழ்கிறான்.
5.14. உன்னதப் பேருணர்வானது, மக்களின் செயல்களுக்கு மூலமாகவோ, செயல்களையோ, அவைகளின் காரண காரிய உறவினையோ உருவாக்குவதில்லை. இயற்கை எனும் பெருநிலத்தில் இச்சூழல்களெல்லாம் நிகழ்கின்றன.
உரை:
எல்லா செயல்களும் நிகழும் பெருநிலத்தினை ஒரு தூண்டுதலால் உன்னதப் பேருணர்வு உருவாக்கியது என்றாலும், தூயப் பேருணர்வுப் பெருவெளி இதில் சற்றும் மாற்றம் கொள்வதில்லை. இயற்கையின் வெளிப்பாடுகள் யாவும் எங்கும் வியாபித்த தூயப் பேருணர்வுப் பெருவெளியினுள்ளேயே நிகழ்கின்றன.
5.15. சர்வ வியாபக உன்னதப் பேருணர்வு, மக்களின் புண்ணிய [சரியான] அல்லது பாப [தவறான] செயல்களால் பாதிப்படைவதில்லை. ஒளியூட்டம் பெறாத மக்கள் மயக்கத்தால் கவ்வப்பட்ட அகத்தறிவால் கலக்கமுறுகிறார்கள்.
உரை:
எங்கும் நிறை தூய பேருணர்வு வெளியானது எப்போதும் தன்மை இழக்காமல் இருக்கிறது. தனிமனித விழிப்புணர்வு வெளியோ, ஆன்ம ஞானத்தை மறைக்கக்கூடிய மயக்கம் மற்றும் காட்சிப் பிறழ்ச்சிகளால் பிளவுபட்டும் குழம்பியும் இருக்கிறது.
நிர்ப்பந்திக்கும் பின்னமான மனோபாவங்களோடும் நடத்தைகளோடும் ஆன்ம வளர்ச்சியை அடைந்துவிடலாம் என ஒருவன் நம்புவது வீணே, ஏனெனில், அந்த மனோபாவங்களும், அதற்கேற்ப சூழலும் தான் அவனின் ஆன்ம விழிப்புணர்வைத் தடுக்கக் காரணம்.
5.16. ஆன்மஞானத்தால் அக்ஞானம் தேயப்பெற்றவர்களுக்கு அவர்களின் ஞானம், சூரியன் மற்ற பொருள்களைக் காட்டுவது போல, பரமாத்மாவைக் காட்டுகின்றது.
உரை:
ஒருவனின் ஆன்ம விழிப்புணர்வு தடைகளின்றித் தெளிவாயும் ஆன்ம ஞான உணர்வு பெற்றும் இருக்கும்போது இறைவனின் முழு உண்மை தானாக வெளித்தோன்றுகிறது.
5.17. ஆத்மாவில் புத்தியுடையவராய், தன் முழு விழிப்புணர்வினை அதில் மூண்டவராய், அதனை உணர்வதை நோக்கமாய்க் கொண்டவராய் அதனையே உன்னதப் புகலிடமாய்க் கொண்டவராய், ஞானத்தால் பிழைகள் நீங்கப்பெற்றவராய் உள்ளவர்கள் திரும்பிவரத் தேவையின்றி முழு விடுதலைக்கு விழிப்படைகிறார்கள்.
உரை:
ஒளியூட்டம் என்பது உருவாக்கப்படுவதல்ல. பந்திப்பதான கட்டளைகளை துறப்பதாலும், பலவீனமடையச் செய்வதாலும், ஒழிப்பதாலும் அனுபவிக்கப் படுவதாகும். முழு விடுதலையானது, ஆன்மஞானத்தை முன்னம் மறைத்திருந்த எல்லா நிர்ப்பந்தங்களையும் நீக்குகிறது.
ஞானம் நிலைப்புப் பெற, தனது மேம்பட்ட நலத்திற்கும், ஆன்ம விழிப்புக்கு உள்ள தடைகளை நீக்குவதிலும், பேரார்வம் கொள்வதற்கான அவசியம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுவதைக் கவனியுங்கள்.
பதஞ்சலி யோக சூத்ரா 2.4 முதல் 2.11 வரை, ஆன்மாவிற்கு உள்ள தடைகளையும் அவைகளைக் களைவது எப்படி என்றும் விளக்கப்பட்டிருக்கிறது:
• உண்மையைக் பிழையாகப் பார்ப்பதே செயல்வடிவாய் அல்லது செயலற்றதாய்க் கட்டிப்போடும் அனைத்தின் அடித்தளப் பரப்பு வெளி.
• அறியாமை என்பது அநித்யத்தை நித்யமெனவும், அசுத்தத்தை சுத்தமெனவும், வலியை சுகமெனவும் ஆணவசுயத்தை அசல் சுயம் எனவும் கற்பித்துக்கொள்ளுதல்.
• ஆணவம் என்பது ஆன்மாவை ஜடத்துடன் அடையாளப்படுத்துவது.
• இன்பத்துடனும் இன்பம் தரும் பொருட்களுடனும் திளைத்திருப்பது அவற்றுடனான விருப்பத்தையும் பற்றினையும் வளர்க்கும்
• வலி அல்லது துன்பத்தை விலக்குதல் வெறுப்பினை வளர்க்கும்
• மரணம் நிச்சயமெனத் தெரிந்திருந்தும் வாழ்வார்வம் அறிவாளிகள் உட்பட எல்லோரிடமும் உண்டு
• பந்திக்கும் இந்தக் கற்பிதங்களை அவை தோன்றும் இடத்திலேயே சமரசப்படுத்தி வெல்லலாம்
• வாழ்வைச் சுருக்கும் மனக் கற்பிதங்கள் மற்றும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளுவது போன்ற துயரத்துக்குள்ளாக்கும் இந்தக் கெட்டிப்பட்டுப்போன கற்பிதங்களை அமைதியான சுய அகத்தாய்வு மூலமும் உயருணர்வு தியானம் மூலமும் வெல்லலாம்.
5.18. விவேகித்த விசாரணை உள்ள சாதகன் ஒன்றேயான அதே உன்னதப் பேருணர்வை எல்லா மக்களிலும் எல்லா படைப்புகளிலும் நீக்கமறக் காண்கிறான்.
உரை:
ஞானத்திறவாதலுக்கு முன்பு கூட, நுண்ணறிவின் விசாரிப்பு நுட்பத்தால், மக்களின் வெளிச்சூழலையும் அவர்களின் வாழ்நிலைகளையும் தாண்டி அவர்களை இருப்பில் வைத்திருப்பதான ஒரு உள்ளார்ந்த வாழ்வூட்டும் சாரஇணைப்பினைக் காண நம்மைப் பயிற்றுவித்துக் கொள்ளமுடியும். இதனை அறிந்தால் எல்லோருடனும் எல்லா வெளிப்பாடுகளிலும் பொருத்தமாக உறவாட முடியும்.
5.19. இகவாழ்க்கையிலும் கூட ஒருமை மெய்யுணர்வினைப் பெற்று மறுஜென்மம் என்பதனை வெல்லலாம்; ஞானத்தால், பிசிறற்ற, எங்கும் ஒன்றாய் நிறைந்திருக்கும் உன்னதப் பேருணர்வுக் காட்சி நிலைப்பட்டுவிடுகிறது.
உரை:
உடம்புடன் உயிர்வாழ்க்கையில் இருக்கும்போதே, இறையுணர்வுச் சமாதியில் இருப்பவர்கள் பிறவிச் சுழலை உண்டாக்கக் கூடிய கர்மக் கட்டினைக் கடந்துவிடுகிறார்கள். பூரண ஒருமையை அனுபவிக்கும் அப்படிப்பட்டவர்களின் இறைஞானம் மாறாதது.
5.20. மகிழ்ச்சியில் ஆரப்பரித்தலோ துக்கத்தில் துவளுதலோ கூடாது. சலனமற்ற விவேகத்தால் மயக்குறா மனத்தினனாய் இறைமையை அறிந்தவன் இறைமையில் நிலைபெற்றவனே.
உரை:
நமக்கோ பிறருக்கோ பிரச்னையின்றி வாழ்தலுக்கு வழி எதுவென்றால் நடப்பவைகளுக்கு தீவிர எதிர்வினை காட்டாமையே ஆகும். உறவாடுகையிலோ, செயலாற்றும்போதோ, தியானத்தின்போதோ, யோக விசாரணையுள்ளவன் சலனமற்று, மனோமயக்கங்களுக்கு இடங்கொடாமல் நித்யத்தில் நிலைத்தவனாய் ஆகிறான்.
5.21. புறவுலக பற்றைத் துறந்தவன், ஆன்மஞானத்தில் திருப்தியடைந்தவன், சமாதியில் நிலைத்தவன் மாறாத ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
உரை:
சுய தர்சனம் பெற்ற ஆத்மா அனுபவிக்கும் ஆனந்தம் தூய்மையானதும், ஞானத்தின் அமைதியான களிப்பும், விடுவிப்பு நிலையும் கொண்டதாகும். அதற்கு மனதளவு, உடலளவு, உணர்ச்சியளவு அடித்தளம் இல்லை. அது ஆற்றல் ஓடுவதால் ஏற்படும் பேரானந்தக்களிப்பு அனுபவமும் அல்ல. வேண்டிய உட்காட்சி பெறுகையினால் நேரும் மேம்போக்கான மகிழ்ச்சியுமல்ல.
5.22. புற உலக இன்பங்கள், ஆரம்பமும் முடிவும் உள்ளதாயிருப்பதனால் துன்பம் விளைவிப்பனவாயிருக்கின்றன. ஞானிக்கு அதில் திருப்தி இல்லை.
உரை:
சகஜ வாழ்க்கையில் இன்பம் துய்த்தல் சாதகனுக்கு ஆன்மீகக் கேடு அல்ல. தேர்ந்த சாதகன் இன்பங்களுக்கோ அவைகளைத் தோற்றுபவைகளுக்கோ அடிமையாவதில்லை. ஏனெனில், இரண்டும் நிலைத்ததல்ல என அவன் அறிகிறான்.
பொருள் பற்று அல்லது சூழல்பற்று ஆகியன அனுமதிக்கப்பட்டால் இழப்புத் துயரம் நிச்சயம். எனென்றால் மனங்களும் சூழல்களும் ஓட்டமும் மாற்றமும் உடையவை.
இயல்பாகவே மாறிக்கொள்ளும் ஒன்றுக்கு உடன்போவது என்பது ஏமாற்றத்தை வரவேற்பதாகும்.
5.23. யாரொருவன் உயிர்வாழ்க்கை வாழும்போதே உணர்வெழுச்சி மற்றும் ஆசைகளை எதிர்த்து வெல்லுகிறானோ, யோகத்தில் நிலைத்த அவன் பேறு பெற்றவன் மற்றும் மகிழ்ச்சியானவன்.
5.24 தன்னுள் சுகம், மகிழ்ச்சி, ஞான ஒளி காண்பவன், இறைமையின் முழு உண்மையை அனுபவிக்கின்றான்.
உரை:
இறை ஒளியின் பிசிறற்ற ஆன்மீக இருப்பான நம் விழிப்புணர்வை இழக்காமல் புற உலகத்துடன் பொருத்தமாக உறவாடலாம். இவ்வாறு வாழ்வது நாம் உள்ளூற மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்கிறது. இந்த மகிழ்ச்சி புறவய நிலைமைகளைச் சார்ந்ததல்ல. ஆன்ம அமைதியில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஒருவனுக்கு இறையிருப்பின் விழிப்புணர்வு எளிதில் மலர்கிறது.
ஆன்ம திறவாதலின் ஆரம்ப கட்டங்களில் சமாதியுணர்வு அனுபவமாகும் போது ஏற்படும் இயல்கடந்த நிலைகள் தற்காலிக நிகழ்வே. நிரந்தர சமாதி சித்திப்பது என்பது நம் தியானப் பயிற்சியால் உண்டான நம் விழிப்புநிலை தியானத்திற்குப் பிறகும் மன ஆட்டங்களுக்கும் இயற்கை காட்டும் தடைகளுக்கும் மாறுபடாதிருக்கும் போது ஆகும். இந்த நிரந்தர மெய்யனுபவமான சகஜ சமாதிநிலை எந்த கால சூழ்நிலைகளினாலும் பாதிக்கப்படாது.
5.25 சத்ய தர்சனம் பெற்றவர்கள், மாசகன்றவர்கள், ஆன்மஞானத்தில் நிலைத்தவர்கள், அனைவரின் நலனிலும் மகிழ்பவர்கள், இறைவெளியில் சுதந்திரமாக திளைப்பவர்களே.
உரை:
ஆன்மஞானத்திலும் இறைக் காட்சியிலும் நிலைத்த ஒளியூட்டம் பெற்ற ஆன்மா அனைவரின் உயர் நலனிலும் மகிழ்ந்து உயிர்வாழ்க்கையிலேயே முக்திநிலையை அனுபவிக்கிறது.
5.26. ஆசையையும் கோபத்தையும் வென்ற, நினைவுகளையும் மனநிலைகளையும் தன்வசத்தில் ஆளும், ஆன்மஞானத்தில் நிலைத்த, அர்ப்பணபுஷ்டியான யோகப் பயிற்சியாளர்களுக்கு இறைக்காட்சி ஆனந்தம் நிறைவாயிருக்கும்.
உரை:
இந்த ஸ்லோகம், அர்ப்பணபுஷ்டியான யோகப் பயிற்சி செய்து மேன்மையடைந்தோரின் நிறைவு நிலையை வர்ணிக்கிறது.
5.27 புற உலகைத் துறந்து புருவங்களுக்கிடையே பார்வையை நிறுத்தி, மூச்சை ஒழுங்காக்கி பிராண, அபான வாயுக்களை சமன்படுத்தி,
5.28 ஞானத்தில் நிலைத்த சாதகன், உணர்வு விடுதலையை பேரிலக்காய்க் கொண்டவன், புலன்கள், மனம் புத்தி அடங்கியவன், ஆசை, பயம், கோபம் விட்டவன் என்றும் விடுதலை பெற்றவனே.
உரை:
ஆன்ம அமைதியின் நேரடி வழி எதுவென்றால்,
• புற உலக உதாசீனம்
• தியானத்தின்போது உடல் மன நினைவற்றிருப்பது
ஆகியன ஆகும்.
ஆன்ம அமைதி மற்றும் தான் தூய உணர்வாளன் எனும் பிரக்ஞை ஏற்படும் வரை இதனைச் செய்யவேண்டும்.
அடுத்த அத்தியாயத்தில் தியான வழிமுறை விரிவாக ஆராயப்படும்.
5.29. யக்ஞங்களின் மற்றும் தவங்களின் பலனைப் புசிப்பவனாக, உலக நாயகனாக, படைப்புக்களின் நண்பனாக என்னை அறிந்து ஞானத்தில் நிலைத்த சாதகன் நித்ய மோனத்தில் அமைதி நிலைக்கப்பெறுகிறான்.
உட்பொருள்:
புனிதக் கொடைகளின் கொள்வோனாக, இயற்கையின் நடத்துடனனனாக, எல்லா ஜீவிகளின் போஷகப் பேருண்மையாக உன்னதப் பேருணர்வினை அறிந்த சாதகன் நித்ய மோனத்தில் அமைதி நிலைக்கப் பெறுகிறான்.
உரை:
நாம், ஒன்றேயான மாறாத, வாழ்வூட்டுவதான, நிர்ணய அதிகாரியான, இறையின் கிரணங்களே.
நடப்பவையனைத்தும் இறைப்பரப்பிலேயே தான் திறவாகிறது. இறைவன்தான் எல்லா ஆன்மாக்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால், நம் ஆன்மஞான விழிப்புக்கான முயற்சிகள் யாவும் இறைவனால் உந்தப்படுபவையே. எல்லா ஆன்மாக்களும் இறையுண்மையை அறிய விதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான சாதகர்களுக்குக் கீழ்கண்ட அம்சங்களுடனான சரிவிகித ஆன்ம விழிப்புணர்வு பாடத்திட்டம் உதவிகரமாக இருக்கும்
• அடிப்படை சுய ஒழுக்கம்
• முழுமை வாழ்வுக் கிரமங்கள்
• பலனளிக்கும் ஆன்மீகப் பயிற்சிகள்
• நுண்ணுணர்வினையும் உள்ளுணர்வினையும் கவனத்துடன் வளர்த்தல்.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், சந்யாச யோகம் என, தலைப்பிடப்பட்ட 5 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Comments
Post a Comment